உன்னை விடமாட்டேன் – பகுதி 67

 'திருமணத்தை ஒத்துக்கொண்டுவிட்டான். தங்கையை இங்கேயே விட்டு விட முடிவு செய்து விட்டான். இனி விட்டால் பறந்து விடுவான். இனி நாம தலையிடாமல் இருக்க முடியாது.' என சட்டென்று முடிவெடுத்து ”ரிஷி! பொறு. தேனரசியை நான் பார்க்க வேண்டுமே!” என்றார் சிங்கராசா தாத்தா.

“தாத்தா உண்மையில் நேரமாகிறது வேலை நிறைய இருக்கிறது. வேலையை முடித்துவிட்டு வருகிறேன்.”

“டேய் நில்லுடா. உதைபடுவ.”

நின்றான் ரிஷி.

“எங்கே என்கிட்ட சொல்லு. உண்மையில் யாருக்கும் தெரியாம உங்கம்மாகிட்ட தேனரசியை விட்டிருக்கிறாயா?”

“தாத்தா! ப்ளீஸ் நான் கண்டிப்பா உங்க கிட்ட தேனரசியக் கூட்டிட்டு வருவேன். அவகிட்ட விபரம் கேட்டுக்குங்க. இப்ப என்னை போகவிடுங்க.”

“நான் உன்கிட்ட கெஞ்சனும்னா கெஞ்சறேன் ரிஷி.” என்று தாத்தா கூறினார்.

ரிஷி தாத்தாவின் கால் அருகே வந்து முட்டியிட்டு காலில் விழுந்து விட்டான்.

“என்ன வார்த்தை சொல்லிட்டீங்க தாத்தா! உங்க பேரன் கெட்டவன் இல்ல. தேனரசி என் பொறுப்பு. மலையரசன் என் தங்கைய கூட்டிட்டு வந்தான். இதோ பாருங்க.” சூர்யகலாவை பிடித்திழுத்து தாத்தா முன் நிறுத்தினான். “அவள் உடம்பெல்லாம் பாருங்க. இதோ கையில் இரத்தம் கூட வந்திருக்கிறது. உண்மையில் தேனரசியை நான் நல்லபடியாகவே வைத்துள்ளேன். எப்போதும் உங்களுக்கு கட்டுப்படுவேன். இப்போது தயவுசெய்து போகவிடுங்கள் தாத்தா!. உண்மையில் மலேசியாவில் தொழிலதிபர் மாநாடு உள்ளது. என்னை தான் போக வேண்டும் என்று ...”

“என் கேள்விக்கான பதில் இது இல்லையே ரிஷி.”

“தாத்தா .... ப்ளீஸ்.”

“சரி! ஒரு முடிவு தெரியணும்தானே!”

“அதான் சொன்னேனே தாத்தா கண்டிப்பா உங்க கிட்ட தேனரசியக் கூட்டிட்டு வருவேன். எப்போதும் உங்களுக்கு கட்டுப்படுவேன்னு. ப்ளீஸ் தாத்தா.”

தாத்தாவிற்கு விஷயம் புரிந்துவிட்டது. “சரி போயிட்டு வா!”

“ரொம்ப நன்றி தாத்தா!” பறந்துவிட்டான் ரிஷி.

சூர்யகலா, தாத்தா அண்ணன் பொய் சொன்ன இடத்தை சரியாகக் கண்டுபிடித்ததும், அண்ணன் தாத்தாவிற்கு பயங்கரமாய் கட்டுப்படுவதை பார்த்தும் அசந்து விட்டாள். “என்ன இப்படி விட்டுட்டீங்களே மாமா!. தேனரசிய பத்தி ஒன்னுமே தெரியலியே!” அழுதாள் முல்லைக் கொடி.

“ரிஷி சொன்னத கேட்டீல்ல. உம்பிள்ளை மலையரசன், ரிஷியோட தங்கைச்ச பாத்துக்கறத விட, நல்லா பாத்துக்குறானாம். கவலைய விடு. ரிஷி வாக்குத் தவறமாட்டான். தேனரசியக் கூட்டிட்டு கட்டாயம் வருவான். என் வார்த்தைக்கு கட்டுப்படுவான். அவனை தேனரசியைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றேன் போதுமா? ரிஷி மாதிரி ஒரு புருஷன் அமைய தேனரசி ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். சரி சரி எல்லாரும் வேலையப் பாருங்க. புது பொண்ணு, மாப்பிள்ளையக் கவனியுங்கள்”

அண்ணன் ஒரு பெண்ணை கடத்தியது ஒரு அதிர்ச்சி என்றால் தன்னை இங்கேயே விட்டு விட்டு கண்டுகொள்ளாமல் போனது மற்றொரு அதிர்ச்சி. அது போதாதென்று தொடர்ந்து தாத்தா கூறியதும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.. 'ஒரு காட்டுவாசிப் பெண் அண்ணனுக்கு எப்படி பொருந்துவாள்?' என்று. ''அயோக்கிய கூட்டம்',. 'மலையரசனைக் கொன்று விடு' என்றெல்லாம் இவனை நம்பி பேசினால் இப்படி நட்டாற்றில் விட்டு விட்டு போய் விட்டான். அங்கு போய் அம்மா அப்பாவிடம் என்ன கதை சொல்லுவான்?’ என்று எண்ணியபடி தவித்து நின்றாள் சூர்யகலா .

அண்ணன் சென்றதுமே அவள் தளிர்மேனி மீண்டும் நடுங்கத் தொடங்கியது. பெரியவர்களுக்கு கட்டுப்பட்டு அவள் அருகில் மாப்பிள்ளையாய் அமர்ந்த மலையரசனுக்கு வேடிக்கையாய் இருந்தது. முல்லையரசியும், முல்லைக்கொடியும் தைரியம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அங்கு யாரும் சூர்யகலா பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவளை தாங்கு தாங்கென்று தாங்கினர். எல்லாரையும் அதட்டும் சிங்கராசா தாத்தா கூட குழந்தைகளிடம் பேசுவதுபோல் தன்னிடம் மென்மையாக பேசியது சூர்யகலாவுக்கு தைரியத்தைக் கொடுத்தது. சூர்யகலாவிற்கு மற்றவர்களிடம் இருந்த பயம் சற்றே விலகியது. மலையரசனை மட்டும் நிமிர்ந்து பார்க்கக்கூட அவளுக்கு தைரியம் வரவில்லை. மலையரசனின் முரட்டுத்தனமான தோற்றம் இன்னும் பயமுறுத்தியது.


Comments

Post a Comment

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31