உன்னை விடமாட்டேன் – பகுதி 68
காடு, மலை தாண்டி காரை ஓட்டியபடி ரிஷி தாய், தந்தையரிடம் பேசினான். விபரம் கேட்ட அவர்களுக்கு “சூர்யகலா ஒருவனை காதலித்து மணந்துகொண்டாள்” என்று கூறினான். பெற்றவர்களால் நம்பமுடியவில்லை “நாம் தொழில் வட்டாரத்தில் பயிற்சி கொடுத்து அவளுக்கு பார்த்து வைத்திருக்கும் வரன்களில் யாரையாவது மணமுடித்துவிடுவோம் என்று பயந்து மணம் செய்து கொண்டாள். அவளுக்கு பிடித்தபடி கைவினைப்பொருள் தயாரிப்புடன் தொடர்பு கொண்டவனைதான் மணந்து கொண்டுள்ளாள்.” என நம்பும்படி அளந்து விட்டு 'அங்கு திருமணம் முடித்துவிட்டது. அவர்களை வீட்டிற்கு அழைத்தேன். பயப்படுகிறார்கள். இரண்டு மாதங்கள் கழித்து வருகிறோம் என்கிறார்கள். மாப்பிள்ளை அம்சமாக உள்ளான். ஆனால் படிப்பு இல்லை. மிக்க திறமைசாலி' என அவர்களுக்கேற்றவாறு பொறுமையாய் பதில் கூறினான். மேலும்
“ஓரிரு நாட்களில் நான் வந்துவிடுகிறேன்.” என்றான் ரிஷி.
“ஏண்டா மலேசிய தொழிலதிபர் மாநாட்டுக்குத்தான் போகமாட்டேன் என்று சொன்னாய். அதற்குரிய வேலையாவது பார்க்க வேண்டும்தானே. என்னடா இது தொழிலை...”
“அப்பா நான் ஒரே நாளில் வந்துவிடுகிறேன் நாளை நிச்சயம் அங்கு இருக்கிறேன்” என்று சமாதானப்படுத்தினான்.
போனில் மாயக்கண்ணன், பிரதீபாவின் கணவன் ஆகிய இருவரிடமும் உடனடியாக தன்னுடைய திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னான். அடுத்த நாள் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் திருமணத்திற்கு தேவையான தாலி, உடைகளை மற்றும் இதர ஏற்பாடுகளை முடித்துவிட்டு காட்டு பங்களாவை அடைந்தான். உள்ளே நுழைந்த ரிஷி பிரதீபாவிடம், “விடிந்தால் எனக்கும், தேனரசிக்கும் திருமணம். இந்தா! அவளது கல்யாணப் புடவை” என்றான். “உன் தங்கை….” என்ற பிரதீபாவிடம் “ஷ்...” என்றான். பிறகு பிரதீபாவை தனியே வெளியே அழைத்துச்சென்று அனைத்து விபரங்களையும் கூறினான்.
“நாளை அவளுக்கு அலங்காரம் செய்து தோழியாய் கூட இருப்பது உன் பொறுப்பு. வெளியே யாரையும் அழைக்கவில்லை. அம்மா, அப்பாவுக்கு கூட தெரியாது. செக்யூரிட்டிகள் முதற்கொண்டு யாருக்கும் தெரியகூடாது. எச்சரிக்கையாய் இரு.” என்றான். “நம் செட்டுக்கு மட்டும் சொல்லிவிடுகிறேன் ரிஷி” என்றாள் பிரதீபா. “நோ” என்று கூறிவிட்டான் ரிஷி. அன்றிரவு பிரதீபாவுடன் தேனரசியை படுத்துக்கொள்ளச் சொன்னான்.
என்ன நடக்கிறதென்றே புரியாமல் விழித்தபடி தன்னருகே எதுவும் பேசாமல் படுத்த தேனரசியின் தலையை அன்புடன் வருடி நாளைக்கு உனக்கும் உன் புருஷன் ரிஷிக்கும் பெருமாள் கோயிலில் திருமணம்.” என்றாள் பிரதீபா. தேனரசியின் கண்களில் கண்ணீர் பெருகியது. 'வந்ததிலிருந்து ரிஷி, ஒரு வாரத்தைக் கூட தன்னிடம் பேசவில்லை. நமக்கு நாளை கல்யாணம் நடக்க உள்ளது என்று கூடவா சொல்லக்கூடாது? மாயக்கண்ணன் வடிவில் மாலுச்சாமி வந்தது உண்மை. இறைவனால் திருமணம் நடக்கிறது. ரிஷிக்கு தன்னிடம் உண்மையான அன்பு இல்லை. இல்லவே இல்லை.' என எண்ணினாள்.. விளைவு. அவள் கண்களில் நீர் நிற்பதாயில்லை.
பிரதீபா ரிஷி சொன்னதுபோல் தேனரசிக்கு ரிஷியை பிடிக்கவில்லையோ? என நினைத்து ரிஷியை உயர்த்திப் பேச தேனரசியின் துக்கம் அதிகமாயிற்று. கடைசியில் என்ன சொல்வதென்றே புரியாமல் “ரிஷியைப் பிடிக்கவில்லை என்றாலும் உன் வயிற்றில் வளரும் பிள்ளைக்காகவாவது இந்த திருமணத்தைச் சகித்துக்கொள்” என்றாள் பிரதீபா கடுப்புடன்.
தேனரசி அழுதபடி உறங்கிய பின், பிரதீபா ரிஷியிடம், “ரிஷி உண்மையில் தேனரசிக்கு உன்னைத் துளி கூட பிடிக்கவில்லை. இந்த திருமணம் அவசியமா? நிறுத்தி விடேன். உனக்கென்ன பொண்ணா கிடைக்காது.” என்றாள். “இல்லை பிரதீ எனக்கென்று, என் குடும்பத்துக்கென்று சில கோட்பாடுகள் உள்ளன. அதை மீறினால் பெரியவர்கள் முன் தலைகுனிய நேரிடும். அவர்களுக்கு தெரியாமல் நான் மறைத்துவிட்டாலும், என் மனசாட்சி என்னை கடுமையாய் உறுத்தும். எனக்கு வேறுவழியில்லை. அவளுக்கு என்னைப் பிடிக்காவிட்டாலும் நான்தான் அவளுக்கு புருஷன்.” என்று தீர்மானமாய் கூறினான்.
Comments
Post a Comment