உன்னை விடமாட்டேன் – பகுதி 70
சுனையில் அவன் அண்ணன் நீச்சல் தெரியாதது போல் மூழ்கி நடித்ததையும், எல்லோரும் விழுந்து விழுந்து அவனைத் தேடியதையும் கூறினான் மலையரசன். “ஓ...அதுதான் எனக்குத் தெரியுமே! அண்ணன் என்னிடம் சொல்லிவிட்டானே!” பயம் விலகி சகஜமாய் பழக ஆரம்பித்தாள் சூர்யகலா. அவள் .குளிக்க மறைவிடத்தை தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவன் மற்றொரு இடத்தில் குளித்தான். பிறகு மலையரசன் காதில் கடுக்கனையும், மூக்குத்தியையும் மாட்டிக்கொண்டான். அவள் அதை போடக்கூடாது என்றாள். “நான் சிறுவயதிலிருந்து போடுகிறேன். போடாமல் முடியாது” என்றான் மலையரசன். “சரி! சரி! போட்டுக்கொள்ளுங்கள்” என்றாள் சோகமுடன்.
“எனக்குப் புரிகிறது சூர்யா. ஆனால் இங்கு இது தானே வழக்கம்.”
“அங்கேயும் இப்போது இந்த வழக்கம்தான். அதனால்தான் சரி என்று விட்டுவிடுகிறேன்” என்றாள் சூர்யகலா. ரிஷிக்கும் தேனரசிக்கும் நடந்த மோதல்களைக் கூறினான். இதை அண்ணன் கூறவேயில்லையே என்று கேட்டுக்கொண்டாள். தான் அங்கு தேனரசியைத் தேடி வந்தது முதற்கொண்டு சூர்யகலாவைக் கடத்திய கதை வரை சொன்னான். ஆர்வமுடன் கேட்டுக்கொண்டே வந்தாள் சூர்யகலா.
மலையரசனிடம் இருந்த முழுபயமும் விலகியது. அவனைத் தவறாக நினைத்து கொல்லச் சொன்னதற்கு மன்னிப்பும் கேட்டாள். "தெரியாமல், புரியாமல் செய்வதையெல்லாம் நாங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளமாட்டோம். அது மட்டுமல்ல, நான் உன்னைக் கடத்தியதும் தவறு தானே!" என்றான் மலையரசன். சூர்யகலா, அப்போதுதான் கவனித்தாள், குடிலுக்கு போகாமல் எங்கெங்கோ சுற்றுகிறோம் என்று. சூர்யகலாவின் முகத்தைப் பார்த்தபடி, “தாத்தா உனக்கு எல்லா இடத்தையும் சுற்றிக்காட்டச் சொன்னார்.” என்றான் மலையரசன். தன் மனதில் நினைப்பதை உணர்ந்து பதில் கூறிய மலையரசனை மலைத்து போய் பார்த்தாள். வெகு நேரமாய் அவன் தன்னை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று உணர்ந்த அவளின் முகம் செவ்வானமாய் சிவந்தது. அவளை உரிமையாய் அருகில் வந்து ஆசையோடு அணைத்தான். “ஐயோ! வீட்டில் செய்ய வேண்டியதை இங்கு செய்கிறீர்கள்” என்றாள் மென்மையாக. “நேற்று எவ்வளவு ஆசையோடு இருந்தேன். நீ தான் என்னைப் பட்டினி போட்டுவிட்டாயே!” என்றான் மலையரசன். வெட்கத்துடன் கலகலவென சிரித்தாள் சூர்யகலா.
XxxxxxxxxXxxxxxxXxxxxxxx
எல்லோரும் கிளம்பிவிட, ரிஷி தேனரசியை காரில் ஏற்றிக் கொண்டு தன் வீட்டிற்கு கிளம்பினான். தாயாரிடம் தான் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாகவும், வேலையாட்கள், செக்யூரிட்டிகள் யாரும் இல்லாதபடிக்கு பார்த்துக்கொள்ளும்படியும், கேட்டைத் திறக்க மட்டும் ஒரு செக்யூரிட்டி இருந்தால் போதும் என்றும் கூறினான் “என்னடா” என்ற தாயாரிடம் “அதுதான் வீட்டிற்கு வருகிறேன் அல்லவா. வந்து சொல்கிறேன்.” என்று வைத்துவிட்டான்.
கார் பங்களாவிற்குள் நுழைந்தது. ரிஷி தேனரசியை தன் கையில் பிடித்துக்கொண்டு அவசர அவசரமாய் தாயாரையும் கூட்டிக் கொண்டு பூஜை அறைக்குச் சென்றான். தாயாரின் காலடியில் மண்டியிட்டு மலையரசனுடன் காட்டு பகுதிக்குச் சென்றதிலிருந்து, இப்போது மணந்துகொண்டது வரை ஒரு பொய் கூட சேர்க்காமல் தாயாரிடம் ஒப்பித்தான். மன்னிப்பும் கேட்டான். புன்னகை புரிந்த தாயார், “மன்னிப்பை தேனரசியிடம் அல்லவா கேட்க வேண்டும். சரி! சரி! எழுந்திரு! யாராவது வரும் முன் உன் அறைக்குக்கூட்டிச்செல். இனி அவள் உன் அறையில் இருக்கட்டும். என் அறை என்றால் தந்தை கண்டுபிடித்துவிடுவார். நான் முடிந்தவரை சமாளிக்கிறேன். அவளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து உனக்கேற்ற ஜோடியாக மாற்றுவது என் பொறுப்பு. இவள் நான் கும்பிட்ட தெய்வம் கொடுத்த மருமகள்.” என்று கூறினார். தன் காலில் விழுந்த இருவரையும் ஆசீர்வதித்து ரிஷியின் அறைக்கு அனுப்பினார். 'ரிஷியின் அப்பாவை எப்படி சமாளிப்பது? தன் பெண் சூர்யகலா எப்படி அங்கு இருப்பாள்?' என அனைத்து பிரச்சினைகளையும் பெருமாள் காலடியில் சமர்ப்பித்துவிட்டு மருமகளை கவனிக்கச் சென்றாள். ரிஷியின் தாயாருக்கு உள்ளூர மகிழ்ச்சிதான். ''எந்த மேனாமினுக்கி வந்து குடும்ப நிம்மதி பறிபோகுமோ? இறைவா! காப்பாற்று' என வேண்டிக் கொண்டது வீண்போகவில்லை' என நினைத்துக்கொண்டாள்.
தேனரசிக்கு, 'நடந்தது என்ன?' என்பது ரிஷி தன் தாயாரிடம் கூறியபோதுதான் முழுமையாக புரிந்தது. தன் கணவன் உண்மையில் அயோக்கியன் அல்ல. என்பதையும் முழுமையாக உணர்ந்தாள். ரிஷி பரபரப்பாய் அவளிடம் அறையை சுற்றிக் காட்டி அவள் நடந்துகொள்ள வேண்டிய முறையை சொல்லிவிட்டு ஆபிஸிற்கு செல்லும் உடையை அவசரமாக அணிந்து கிளம்பினான். தாயார் கொண்டுவந்த பானத்தை அவசரமாய் குடித்து விட்டு ஓட்டமாய்க் கிளம்பிவிட்டான்.
தேனரசியின் அழகைக் கண்டு வியந்தார் ரிஷியின் தாயார். மகாலக்ஷ்மி போல் அழகாய் உள்ளாய். சரஸ்வதி போலவும் இருக்க வேண்டும் சரியா? என்றவர் ரிஷியைப் பற்றியும், அவனது தொழில், குணம் செயல்பாடுகள் ஆகியவற்றை புரியும்படி தெளிவாகக் கூறினார். மேலும் ரிஷியின் குணத்தைத் தெரிந்துகொள்ள சில சம்பவங்களைக் கூறினார். ரிஷியின் தாயாரை தேனரசிக்கு நிரம்பப் பிடித்தது. 'அத்தை, அத்தை' என அட்டையாய் ஒட்டிக்கொண்டாள்.
Comments
Post a Comment