உன்னை விடமாட்டேன் – பகுதி 72
தந்தை மலேசியா போய் இரண்டு நாட்களாகி விட்டன. முழு வேலையும் ரிஷியின் தலையில். முக்கியமான பைல்களை கவனமாக ஆராய்ந்து முடிவெடுத்துக் கொண்டிருந்தான். அவனின் குறிக்கோள் தற்போதைய மலேசியா மற்றும் இதர முக்கிய வேலைகளை முடித்து விட்டு இன்னும் அதிகப்படியாக வேலை செய்து தந்தை வரும் போது அவருக்கு முக்கிய வேலை இல்லாமல் சற்று ஓய்வு கொடுக்க வேண்டும். அந்த ஓய்வின்போது எப்படியாவது நடந்தவைகளைக் கூறி இரு திருமணங்களையும் அங்கீகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே!
“சார் செக்யூரிட்டிகிட்ட இருந்து போன்.” என்ற செக்ரெட்டரியிடம் எரிச்சலுடன் “இதையெல்லாம் நீங்களே பார்க்கக் கூடாதா.?” என்றான் ரிஷி.
“நீங்கள்தான் பேச சொன்னதாக சொன்னார் சார்.”
உடனே போனை வாங்கி “ஹலோ” என்றான் ரிஷி.
“சார் நீங்க சொன்ன மாதிரி காதுல கடுக்கனும், மூக்கில வளையமும் இருக்கு.. கொண்டை போட போதுமான முடி இல்ல. ‘.உள்ளே அனுப்பு. ரிஷியை பார்க்கணும்’ன்னு மரியாதையே இல்லாம உங்க பேரை சொல்றான் சார். ஏன் பார்க்கணும்னா அதெல்லாம் ரிஷிக்கு தெரியும்னு தெனாவெட்டா பேசுறான் சார். உள்ளே அனுப்பவா விரட்டிவிடவா? சார்.”
செக்யூரிட்டி பேசும்போதே ரிஷி அவசர அவசரமாய் தன் விலையுயர்ந்த செல்போனில் அலுவலகத்தில் பொருத்தியுள்ள கண்காணிப்பு வீடியோவை ஆன் செய்து பார்த்தபடி “சீக்கிரம் உள்ளே அனுப்புங்கள். எந்த புரோஸிஜரையும் பாலோ பண்ணாம உடனடியா உள்ள அனுப்புங்கள் சீக்கிரம்.” என்று ஆங்கிலத்தில் கூறினான். ரிஷி 'இவன் ஏன் இந்த நேரத்தில் இங்கே வந்தான்' என்று நினைத்தபடியே செல்போனில் அவனது நகர்வுகளைப் பார்த்தபடி அவனிருக்கும் இடத்திற்கு வேக நடையுடன் சென்றான்.
‘தலை போற அளவுக்கு இங்கே இருக்கிற முக்கிய வேலையைவிட வேறு முக்கியமான வேலை என்ன வந்துவிட்டது? தன்னிடம் செய்யச் சொல்லி சொல்லாமல் நேரடியா இவரே போகும் அளவுக்கு என்ன வேலை? கூட போகலாமா? இங்குள்ள வேலையைக் கவனிக்கலாமா!’ என்று குழம்பி நின்றார் செக்ரெட்டரி. 'அந்த செக்யூரிட்டியிடம் என்ன விஷயம் என்றால் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் ஐயாகிட்டதான் சொல்லணும்னு சொல்லிட்டான். நம்மைத் துளி கூட அவர் எதிர்பார்த்த மாதிரியும் தெரியவில்லை அவரே பார்த்துக் கொள்ளட்டும்' என மனதில் நினைத்தவாறு அங்குள்ள வேலையைக் கவனித்தார் செக்ரெட்டரி.
கட்டவிழ்ந்த காளை போல மலையரசன் எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் எங்கெல்லாம் நுழைய வழி இருக்கிறதோ எங்கெல்லாம் நுழைய முடிகிறதோ அங்கெல்லாம் நுழைந்து சென்றுகொண்டிருந்தான். எதிர்பட்டோரிடம் “ரிஷி எங்கிருக்கிறான் தெரியுமா?” என்று அவன் கேட்ட ஒருமை வசனம் அங்கே அதிர்வலையை ஏற்படுத்தியது. ‘நீ யார்?, ஏன் அவரைப் பார்க்க வேண்டும்?, எதற்கு அவரைப் பார்க்க வேண்டும்?, அவரை உனக்கு எப்படித் தெரியும்?’ என்ற கேள்விகளை அலட்சியப்படுத்தினான். “அவன் எங்கே? அதை மட்டும் சொல்லுங்க சாமி!” என்றான். மலையரசன். மலையரசனின் உருவத்தோற்றம் வித்தியாசமாய் அனைவருக்கும்பட அனைவரும் வேலையை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்தபடியும் ஒருவரோடு ஒருவர் பேசியபடியும் ஒரு வித சுவாரசியத்துடன் நின்றனர்.
அங்கே வேலை தடைபடுவதைக் கண்ட தலைமை நிர்வாகி அவனை விரட்ட முயல்வதை செல்போனில் கண்ட ரிஷி தொலைவில் உள்ள லிப்டை பயன்படுத்தாமல் அருகில் உள்ள படிக்கட்டு வழியாய் ஓடி வர ஆரம்பித்தான். “ரிஷி இருக்கானா? ரிஷியை முதல்ல வரச்சொல்லுங்க சாமி! அவன பாக்காம நான் போக முடியாது சாமி” என மலையரசன் தலைமை நிர்வாகியிடம் கூறியதைக் கேட்டபடி ரிஷி வந்து கொண்டிருந்தான்.
‘தன்னுடன் ஒரே தட்டில் எச்சில் சாப்பாடை சாப்பிட்டு தன்னுடன் உரிமையாக சண்டையிட்டு விளையாடியவனைப் பார்ப்பது இவ்வளவு கடினமா? சில இடங்களில் கதவே திறக்க மாட்டேன் என்கிறது. அங்குள்ளவர்கள் ஓரிடத்தில் எதையோ காணபித்தால் அது திறந்து கொள்கிறது. அப்படியே நுழைந்தால்தான் உண்டு. யாரும் உள்ளேயே விட மாட்டார்கள் போல் உள்ளது. அப்பாடியோ! அவனே வந்துவிட்டான்.’ என மலையரசன் நிம்மதி பெருமூச்சு விடும்வேளையில் ...
Comments
Post a Comment