உன்னை விடமாட்டேன் – பகுதி 73

 ரிஷி வருவதை கவனிக்காத தலைமை நிர்வாகி “அவர் என்ன உன் வீட்டுவேலைக்காரனா? நாயே! பேரை மரியாதையில்லாமல் சொல்லுகிறாய் போதாக்குறைக்கு அவன் இவன் என்று பேசுகிறாய்?” என்று கூறியடி மலையரசன் கன்னத்தில் திடீரென்று அறைய, ரிஷி வந்து பொதுமேலாளரான வர்மாவின் கன்னத்தில் பதிலுக்கு அறைய அலுவலகத்தில் பெரும் நிசப்தம் நிலவியது.

மலையரசனை மேற்கொண்டு முன்னேறி உள்ளே வராமல் தடுக்க முற்பட்டவர்களும், தலைமை நிர்வாகிக்கு துணையாக வந்தவர்களும் அதிர்ச்சியுடன் பின் வாங்கினார்கள். “சார்” என்றார் தலைமை நிர்வாகி அதிர்ச்சியுடன். “நீங்க உங்க பொஸிஸன விட்டு ஏன் கீழே இறங்கினீங்க மிஸ்டர். வர்மா. பொதுமேலாளரிடமோ அல்லது செக்யூரிட்டிகிட்டேயோ இவன் எப்படி உள்ளே வந்தான்னு விசாரிச்சு, கவனிக்க சொல்லவேண்டியது தானே?. கரெக்டா ப்ரொஸிஜரை பாலோ பண்ணியிருந்தா நான் தான் அவனை உள்ளே வர விட்டேன்னு தெரிஞ்சிருக்கும். தலைமை நிர்வாகியாக இருக்க உங்களுக்கு தகுதி இருக்கான்னு முதல்ல யோசிங்க.” என ஆங்கிலத்தில் அவரைச் சாடினான் ரிஷி.

“சாரி சார். மரியாதையில்லாம உங்க பேர் சொல்லி கூப்பிட்டதை கேட்டதால கோபப்பட்டுடேன். சாரி சார்” என்றார் தலைமை நிர்வாகி அடிவாங்கிய கன்னத்தில் கைவைத்தபடி.

“இந்த வேலையில் உணர்ச்சிவசப்படக்கூடாது மிஸ்டர் வர்மா.”

“சாரி சார்” என்று வாய் சொன்னாலும் தலைமை நிர்வாகியின் மனது “இந்த மாதிரி சம்பந்தமே இல்லாமல் புரோஸிஜரை பாலோ பண்ணாம திடீரென்று ஒருவன் நுழைந்தால் புரோஸிஜரை கடைபிடிக்கிறேன்னு நேரம் விரயமாகாதா?  அவன் ஏதாவது ஏடாகூடம் செய்துவிட்டால் இதே வாய்தான் ஏன் புரோஸிஜரை பாலோ பண்றேன்னு நேரத்தை விரயமாக்குனீங்கன்னு கேட்கும். நீங்களும் உங்க பொஸிஸன விட்டு கீழே இறங்கி வராம இருந்தா இப்படி குழப்பம் வராது. புரோஸிஜரை நீங்க மட்டும் மீறலாமா?” என்றது.

‘புரொஸிஜரை கடைப்பிடித்தால் குடும்ப விவகாரம் சந்திக்கு வந்து விடும். மேலும் தான் சொல்லும் முன்பே விஷயம் தந்தைக்கும் போய் விட்டால்....' என்ற பயம் ரிஷிக்கு இருந்தது. அது தலைமை நிர்வாகிக்கு தெரிய வாய்ப்பில்லையே! ‘இந்த காட்டானுக்காக எல்லா முன்னிலையிலும் தன்னை அடித்து விட்டாரே அதுவும்தான் அவனை அடித்த வேகத்தைவிட அதிகமாக. இன்னும் கடுமையாக வலிக்கிறதே! அவ்வளவு முக்கிய ஆள் போலவே தெரியவில்லையே! இவன் யார்?’ அவரும் குழம்பினார்.

ரிஷியோ, தொடர்ந்து ஆங்கிலத்தில் அனைவரையும் பார்த்து, “யார் வந்தால் என்ன? போனால் என்ன? தீ அபாய அலாரம் அடித்தால் மட்டும்தான் வேலையைவிட்டு நகரணும். எல்லோரும் 20 நிமிடம் வேலை பார்க்காமல் இருந்துருக்கீங்க. எக்ஸ்டரா 20 நிமிடம் இருந்து வேலையைப் பார்த்துட்டு கிளம்புங்க” என்று கூறினான்.

வேலையைவிட்டு விட்டு வேடிக்கை பார்த்த அனைவரும் சின்சியராய் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தனர். ஆபிஸ் அமைதி நிலைக்கு திரும்பியதை சுற்றி வர ஒரு பார்வை பார்த்தான் ரிஷி. பிறகு மலையரசனின் தோளில் கைபோட்டபடி “என்னடா இது கோலம் ஆபிஸுக்கு எப்படி வரணும்னு தெரியாதா?” என்று மென்மையாக சிரித்தபடி தமிழில் கேட்டான் ரிஷி.

ரிஷியை பார்த்ததுமே அசந்து போயிருந்தான் மலையரசன். அவனைக் கண்டு அனைவரும் அடங்கியது மிகவும் ஆச்சரியமூட்டியது. அவன் பேசிய மொழி அவனுக்கு சுத்தமாய் புரியவில்லை. வியப்பில் பேச்சே வராமல் நின்ற அவனை “வாடா போலாம்” என்று தன்னறைக்கு அழைத்துச் சென்றான் ரிஷி.

அந்த நிறுவன கட்டிடத்தின் விஸ்தீரணம் மலையரசனை வியக்க வைத்தது. அவன் கேட்டிலிருந்து உள்ளே நுழைந்த தலைமை நிர்வாகியை சந்தித்த இடம் வரை உள்ள தொலைவை விட ஐந்து மடங்கு தொலைவில் ரிஷியின் அலுவலக அறை இருந்ததாய் மலையரசனுக்குத் தோன்றியது. விறுவிறுவென தன்னை இழுத்துச் செல்லும் ரிஷியிடம் “நான் வந்தேன்னு தெரிந்து வந்தாயா தெரியாம வந்தாயா ரிஷி?” என்று கேட்டான் மலையரசன். “தெரிஞ்சிதான் வந்தேன்.” என்று அவனை வேகமாக தன்னுடன் இழுத்துச் சென்று தன் அறையில் ஒரு நாற்காலியில் அமர வைத்துவிட்டு தன் வேலையை மீண்டும் ஆரம்பித்துவிட்டான்.

அரை அடி அளவுக்கு உள்ளே புதைந்து மென்மையாய் இருந்த நாற்காலியைப் பற்றி நடுவில் பேச முயன்ற மலையரசனிடம், “தயவு செய்து இப்போது பேசாதே. அமைதியா இரு.” என்றான் ரிஷி தன் வேலையில் கவனம் பதித்தபடி. தங்கையைப் பற்றி கேட்டு, அவளை நிச்சயம் பார்த்து விட்டுத்தான் இங்கிருந்து நம்ம இடத்திற்கு செல்ல வேண்டும் என மனதில் திடமாக முடிவெடுத்தான் மலையரசன். 


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31