உன்னை விடமாட்டேன் – பகுதி 74
முன்பு ஏற்பட்ட தாமதத்தைச் சீர்செய்யும் வகையில் துரிதமாக பைலை பார்வையிட்டு செக்ரெட்டரியிடம் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தான் ரிஷி. அவரும் அதற்கேற்ப துரிதமாக மற்றவர்களை இயங்க வைத்துக் கொண்டிருந்தார். ரிஷியைப் பார்க்க நிறைய பேர் காத்துக்கொண்டிருப்பதும் என்ன விஷயம் என செக்ரெட்டரியிடம் விசாரித்து பல பேரை சந்திக்காமலே அவர்களின் தேவையை, வேண்டுகோளை மறுத்தோ, பூர்த்தி செய்தோ அனுப்புகிறான் என்பது மலையரசனுக்குப் புரிந்தது. ஆனால் ரிஷியைக் காண எதற்காக வருகிறார்கள், என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை.
யாரோ ஒருவர் வந்தபோது மட்டும் சிறிது அளவோடு புன்னகைத்து கை குலுக்கினான் ரிஷி. பிறகு அதிகாரத் தோரணையுடன் நிதானமாக ரிஷி ஆங்கிலத்தில் சீரியசாக பேசிக்கொண்டிருந்தான். ரிஷியை பார்க்க வந்தவர் முதலில் மலையரசனை விசித்திரமாக பார்த்து விட்டு ரிஷியின் பேச்சில் ஆழ்ந்து போனார். அவர் ரிஷி சொன்னதெற்கெல்லாம் இளித்தபடி சரி சரி என்கிறார் என்பது மலையரனுக்குப் புரிந்தது. எழுந்து போக மனமில்லாமல் அமர்ந்திருந்தவரிடத்தில் அவ்வளவு தான் விஷயம் என தன் தலையசைப்பால் அவரை வெளியேற வைப்பதையும் பார்த்தான். பார்க்க பார்க்க மலையரசனுக்கு நேரம் போவதே தெரியவில்லை பசி வயிற்றை கிள்ளியது. நடுவில் ஏதோ மூன்று முறை பானம் வந்தது. குடித்தான்தான். ஆனால் அது எந்த மூலைக்கு. பசியைப் பொறுத்தபடி ரிஷியை சலிக்காமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
செக்ரெட்டரி ரிஷியிடம் தயங்கி தயங்கி ஏதோ சொல்வது தெரிந்தது. கைக்கடிகாரத்தை பார்த்தவன் மலையரசனை பார்த்தபடி செக்ரெட்டரியைத் திட்டினான். ஆங்கிலத்தில்தான். எதுவும் புரியாமல் வேடிக்கைப் பார்த்தான் மலையரசன். அவா் திட்டை வாங்கிக்கொண்டு போய்விட்டார். “ஏண்டா உனக்கு பசிக்கலையா? சாப்பாடு கேட்க வேண்டியது தானே!” என்று எரிந்து விழுந்தான். “இவ்வளவு பெரிய நிறுவனத்தை நடத்துற. நீயா சாப்பாடு தருவேன்னு நினைச்சேன்” என்றான் மலையரசன். தன்னை அவன் நக்கலடிக்கிறான் என்று புரிந்தாலும் பதிலுக்கு பதில்கொடுக்க முடியாமல் பணி சுமை காரணமாக தலையில் கை வைத்தபடி அமைதியாக மீண்டும் வேலையில் மூழ்கினான்.
செக்ரெட்டரி “சாப்பிட வாங்க” என மலையரசனை அழைத்தார். மலையரசன் நகர்ந்தால் தானே. தன்னால் ரிஷியின் மதிப்பு குறையக்கூடாது என எண்ணிய மலையரசன் மரியாதையோடு “அந்த சார் எப்போ சாப்பிடுவார்?” என்று ரிஷியைக் கை காட்டி கேட்டான். “அநேகமாக சாப்பிட மாட்டார் என்று நினைக்கிறேன் சார். நீங்க சாப்பிட வாங்க” என்றார் பவ்யமுடன் செக்ரெட்டரி. “எனக்கு பசிக்கல. எதுவும் வேண்டாம்.” என்றான். மலையரசன்
ஆனால் ரிஷியின் தன்மையை அறிந்திருந்த செக்ரெட்டரி ரிஷியின் கோபத்திற்கு பயந்து கடைசியில் மலையரசன் இருக்குமிடத்திற்கே உணவைப் பரிமாறும் பணியாளுடன் வந்தார். தனக்கு மட்டும் செக்ரெட்டரி ஒருவரை வைத்து உணவைப் பரிமாறியது மலையரசனுக்கு கோபத்தை வரவழைத்தது.
அவன் மதிப்பு குறையக்கூடாது என சார் போட்டு பேசியவன் அனைத்தையும் மறந்து கோபத்துடன், ஏண்டா! என்னடா இது? நீ சாப்பிடலியா? உனக்கெங்கே சாப்பாடு?” என்று ‘டா’ போட்டு கத்த, உள்ளே இருந்த செக்ரெட்டரி, உணவு பரிமாறும் பணியாள் மற்றும் ரிஷியிடம் பேசிக்கொண்டிருந்த கிளை மேலாளர் ஆகியோர் அப்படியே அதிர்ந்து போய் பார்த்தனர்.
தன்னை சந்திக்க வந்த மும்பை கிளை மேலாளரிடம் பைலை பார்த்தபடி பேசிக்கொண்டிருந்த ரிஷிக்கு, மலையரசன் இருப்பிடத்தில் மலையரசன் தன்கூட சேர்ந்து சாப்பிடாமல் இருந்ததால், தான் பண்ண கூத்து தன்னை மீறி நினைவுக்கு வந்தது. பதிலுக்கு மலையரசன் இப்போது தன்னைப்போலோ, அல்லது அதற்கு மேலோ ரகளை செய்தால் அது எங்கு போய் முடியும்? எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படும்? அதோடு மட்டுமல்ல மலேசியாவில் தந்தை போடும் ஒப்பந்தத்தில் பங்குதாரர் கடைசி நேரத்தில் போட்ட நிபந்தனையை அதில் அவசரமாய் சேர்த்து சரிபார்க்க வேண்டியிருந்தது. அதற்காகவே மும்பை கிளை மேலாளரும் வந்திருக்கிறார். நினைத்துப் பார்த்து அரண்டு விட்டான் ரிஷி. ஏனெனில் குறித்த வேளையில் இவ்வேலையை முடிக்காவிட்டால் மலேசியா மாநாட்டில் பிரச்சினை வந்துசேருமே! கோடிக்கணக்கில் நட்டம் ஏற்படுவதுடன் நிறுவனத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். முக்கிய வேலைகள் வேறு குவிந்து கிடந்தன.
“டேய்! தயவு பண்ணி சாப்பிடுடா! நான் அப்புறம் சாப்பிடறேன். இப்போ நான் சாப்பிட்டு லேட்டானா பெரிய பிரச்சனை மலேசியாவுல நடக்கும். புரிஞ்சுக்கடா ப்ளீஸ்.” என்று உண்மையிலேயே அரண்டு போய் பரிதாபமாகவும், பயத்துடனும் கெஞ்சினான் ரிஷி. மலையரசன் 'டா' போட்டு பேசியது ஒரு அதிர்ச்சி என்றால் ரிஷி உண்மையில் அரண்டுபோய் கெஞ்சியது மற்றவர்களுக்கு கடுமையான அதிர்ச்சியாய் இருந்தது. சட்டென்று சூழ்நிலையை புரிந்துகொண்ட மலையரசன் தன்னால் ரிஷியின் கௌரவம் பாதிக்கப்படுகிறதே? என எண்ணி யாரும் இருந்தால் ரிஷியிடம் பேசக்கூடாது என முடிவு பண்ணி ரிஷியிடம் அவன் சொன்னதற்கு ஒப்புக்கொண்டதற்கு அடையாளமாய் தலையாட்டினான். ஆனால் சிறிதளவே சாப்பிட்டான்.
வேலையில் கவனமாய் இருந்தாலும் ரிஷி, மலையரசன் சிறிதளவு சாப்பிட்டதையும் கவனித்தான். ரிஷியின் மனம் வலித்தது. வேறு வழியின்றி தொடர்ந்து வேலையைக் கவனித்தான் ரிஷி. மலையரசன், ரிஷியால் தன்னைக் கவனிக்க கூட முடியாமல் பணிச்சுமையால் அவன் அழுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தான். ‘இது வரமா? சாபமா?’ என மலையரசனுக்குப் புரியவில்லை.
Comments
Post a Comment