உன்னை விடமாட்டேன் – பகுதி 75

 மலையரசனுக்கு அந்தி வேளையா? இரவாகிவிட்டதா? என்பது கூடத் தெரியவில்லை. நடுவில் ஒரு சில குறிப்பிட்ட போன்களில் மட்டுமே ரிஷி பேசினான். அதுவும் செக்ரெட்டரி பேசிய பின். ஒரு வழியாக அந்த செக்ரெட்டரி ஒரு பெட்டியில் பைல்களை அடுக்கிவைத்தார். பென் டிரைவ் போன்ற வேறு சில பொருட்களையும் வைத்தார். கடைசியில் ரிஷி கொடுத்த பைலையும் அதில் வைத்து மூடினார். அங்கிருந்து செக்ரெட்டரி கிளம்பிவிட்டார். ‘அப்பாடியோ’ என்றிருந்தது மலையரசனுக்கு. இந்த ஆள் கிளம்பிவிட்டால் ரிஷியும் கிளம்புவான் எனத் தோன்றியது மலையரசனுக்கு.

ரிஷி இருப்பிடத்திலிருந்து எழுந்து மலையரசனைப் பார்த்தான். பிறகு வெளியே கதவைத் திறந்து போக முயன்ற செக்ரெட்டரியிடம் ஏதோ ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு அருகிலுள்ள ஓர் அறைக்குள் போய்விட்டான். எப்படியிருந்தாலும் ரிஷி வருவான் என காத்திருக்கும்போது திடீரென இருவர் வந்து மலையரசனை தலை முதற்கொண்டு நாகரீகமாக மாற்றி, ஆடைகளைக் கழட்டி தாங்கள் கொண்டுவந்த ஆடைகளை அவனுக்கு அணிவிக்க முயன்றனர். அவன் முரண்டுபிடிக்க சத்தம் கேட்டு முகத்தில் சோப்பு நுரையோடு வந்த ரிஷி, “தங்கச்சியப் பார்க்கணுமா, வேண்டாமா?” என்று கூற அமைதியாய் ஒத்துழைப்பு கொடுத்தான் மலையரசன். முகத்தைக் கழுவிவிட்டு வேகமாய் வந்தவன், “என்ன இவ்வளவு நேரமா?” என வந்தவர்களிடம் சிடுசிடுத்துவிட்டு அவனே மலையரசனுக்கு ஷுவை அணிவித்துவிட்டு கைப்பிடியாய் அவனை இழுத்துச் சென்றான். உடைமாற்றி விட வந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

ரிஷிக்கு முன்பே செக்ரெட்டரி கார் டிரைவரிடம் பெட்டியைக் கொடுத்து ரிஷி ஏறுவதற்காக கார் கதவை திறந்துவைத்திருக்க அவரைப் போகச் சொல்லிவிட்டு கார் டிரைவரை இறங்கச்சொன்னான் ரிஷி. கார் டிரைவர் புரியாமல் இறங்க, “நானே ஓட்டிச்செல்கிறேன். நீங்கள் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு நிதானமாய் வேறு காரில் வாருங்கள்” என மலையரசனை முன்னே அமர வைத்துவிட்டு தானே டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டலானான்.

“என்னடா வேலை இது சாப்பிடக்கூட இல்லை.” என்றான் மலையரசன் சற்று கோபத்துடன்.

“என் அப்பா மலேசியா சென்றதால் ஏற்பட்ட பணிச்சுமைதான். மற்றபடி தினந்தோறும் இவ்வாறு இருக்காது.”

“சரி! சரி! என் தங்கை அந்த காட்டு பங்களாவில் தானே இருக்கிறாள். அங்கே ஓட்டு” என்றான் மலையரசன்

“என்ன உளறுகிறாய், மலையரசா? நான் முன்பே சொன்னேனே தேனரசி என் தாயாரிடம் இருக்கிறாள் என்று.”

“நிறுத்துடா உன் பொய்யை! எனக்குத் தெரியாமல் எந்த பெண்ணும் தாயாரிடம் இருக்க முடியாது. என் அண்ணன் பொய் சொல்கிறான் என்று. சூர்யகலா என்னிடம் கூறிவிட்டாள்.”

“ஓ... ஓ...ஹோ.... அந்த அளவுக்கு இருவரும் ராசியாகிவிட்டீர்களா?” என்று சிரித்தான் ரிஷி.

“விளையாடாதே ரிஷி. அம்மா அழுதுகொண்டே இருக்கிறார்கள். தாத்தாவுக்கு தெரியாமல் வந்திருக்கிறேன்.”

“தாத்தாவுக்கு என் பேரில் எவ்வளவு நம்பிக்கை. ஆனால் உனக்கு?”

“டேய்! தேனரசி எங்கே எப்படி இருக்கிறாள்? ஒரு வார்த்தையாவது பொய் கலக்காமல் அவளைப் பற்றி சொல்கிறாயா?”

“ஒரு நிமிடம்” என்ற ரிஷி செல்போனில், “அம்மா! சூர்யகலாவின் கணவனைக் கூட்டிக்கொண்டுவந்து கொண்டிருக்கிறேன். தேனரசியிடம் சொல்ல வேண்டாம் சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும்“ என்று பேசினான். பிறகு மீண்டும் மலையரசனிடம் “ஏண்டா! ஏற்கனவே அவளை என் அம்மாவிடம் விட்டிருக்கிறேன். பாடம் புகட்டிக் கொண்டிருக்கிறோம் என்றேனே” என்றான். மலையரனின் முகம் கோபத்தில் 'ஜிவுஜிவு' என சிவந்தது. ரிஷி சொன்னதை அவன் நம்பத் தயாராக இல்லை. தன்னைக் கட்டுப்படுத்தியபடி அமைதியாக இருந்தான். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்ட அவனிடம் ரிஷியும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31