உன்னை விடமாட்டேன் – பகுதி 76
ரிஷியின் தாயார் காயத்ரி, முன்னே வந்து மலையரசனை வரவேற்றார். அவரிடம் மலையரசன் கோபமாக ஏதோ சொல்ல முயல ரிஷி “வாடா! தேனரசியைப் பார்க்கலாம்“ என்று தனது மாடிக்கு இழுத்துச் சென்றான். பிறகு அவனைவிட்டு விட்டு அறைக் கதவைத் தட்டினான். திறந்த தேனரசிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இருக்காதா பின்னே! மணி ஆறு தானே ஆயிற்று. அதற்குள் அருமைக் கணவன் வந்து விட்டானே!
தன் கரங்களை அவன் கழுத்தில் மாலையாக போட்டபடி, “அத்தான்! இன்று வேலை சீக்கிரம் முடிந்துவிட்டதா?” என்றாள் உற்சாகத்துடன். “ஆமாம்.” என்றான் ரிஷி. தொடர்ந்து பின்னே வந்த மலையரசன் தேனரசியின் குரலைக் கேட்டுதான் அவளை அடையாளம் காண முடிந்தது. அவ்வளவு ஆடை அலங்காரம். தேனரசி பின்னால் வரும் ஆடவனைக் கண்டு பதறியவாறு தன் கரங்களை ரிஷியின் மேலிருந்து எடுத்தாள். ஆனால் ரிஷியோ அவளைத் தன்னைவிட்டு விலக அனுமதிக்கவில்லை. சேர்த்து அணைத்தான். “என்ன இது? கண்ட ஆண்களை நம் அறைக்குள் ஏன் கூட்டி வந்தீர்கள்“ கோபத்துடன் ரிஷியிடம் சிடுசிடுத்தாள் தேனரசி.
“நான் முடியாது என்று தான் சொன்னேன். ஆனால் எனது தங்கையை பார்த்தே ஆகவேண்டும் என்று இவன் ஒற்றைக் காலில் நிற்கிறான். வேறு வழியின்றி கூட்டி வந்தேன்” என்றான் ரிஷி. அப்பொழுதுதான் தேனரசி உள்ளே வந்த ஆடவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கு வியப்பும் ஆச்சரியமும் மிகுந்தது. “அண்ணா! உன்னை அடையாளமே தெரியவில்லையே! கொண்டை இல்லாமல் அடையாளமே தெரியவில்லை அண்ணா!. நீ எப்படி இங்கே?” என்றவளுக்கு மிகுந்த ஆனந்தம்.
மலையரசனுக்கு ஒரே மலைப்பாய் இருந்தது. அவள் கழுத்தில் தாலியும், வயிற்றில் சிசுவையும் தாங்கி நிற்பதைப் பார்த்தான். மலையரசனுக்கு முதலில் பேச்சே வரவில்லை. “டேய், ரிஷி! என்னென்னமோ பண்ணியிருக்கிற. இதைப் பத்தி அங்கே மூச்சு கூட விடல. அடப்பாவி! என்றான் ரிஷியைப் பார்த்து. ரிஷிக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் சிறு வெட்கத்துடன் மெளனமாயிருந்தான். அதைக் கவனித்து வேண்டுமென்றே மலையரசன் தொடர்ந்து கிண்டல் செய்ய ஆரம்பித்ததும் சமாளிக்க ஆரம்பித்தான் ரிஷி.
ரிஷி. “உனக்குத்தான் ஒன்னும் தெரியல. தாத்தாவுக்கு கண்டிப்பா விஷயம் தெரியும். என் மானத்தை வாங்காமல் அய்யோ பாவம் என்று விட்டு விட்டார்கள். தாத்தாவிற்கு தெரியாமல்தானே நீ வந்தாய்? என்ன இங்கு நடந்திருக்கும்? என்று தாத்தாவிடம் கேட்டுப்பார். சரியாகச் சொல்லிவிடுவார்.” என்றான்.
“ஓஹோ... அதனால்தான் அங்கு முன்கூட்டியே எச்சரிக்கையாக தாத்தா காலைப் பிடித்துக்கொண்டாயாக்கும்.” என்றான் மலையரசன். ‘ஆம்!’ என ஒத்துக்கொண்டான் ரிஷி. பிறகு மலையரசன் ரிஷியைக் கட்டிப் பிடித்து, “ரிஷி! தாத்தா எப்படியாவது உனக்கு தேனரசியக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு இருக்கிறார். ஏற்கனவே கல்யாணம் ஆயிட்டதுன்னு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாரு. இப்பவே ரெண்டுபேரும் கிளம்புங்க. தாத்தாவப் பார்க்கலாம். ஏண்டா முன்னமே இதைச் சொல்லியிருக்கலாம்ல. நாங்க வெளியாளுங்களுக்கு பொண்ண கொடுக்கவும், எடுக்கவும் மாட்டோம் தான். ஆனால், நீ தான் எங்க வீட்டுப் பிள்ளையாச்சே! என்ன தயக்கம் உனக்கு?” மிக சந்தோஷத்துடன் பேசினான் மலையரசன்
“டேய் பொறு என்ன நடந்ததுன்னே தெரியாம ஏண்டா பேசிட்டே போற! தயவு செய்து பொறுமையா இரு. நிறைய பிரச்சனையை நான் சமாளிக்க வேண்டியிருக்கு. இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு திடீரென்று ஆபிசுக்கு வந்துட்ட. அப்பாவுக்கு என் கல்யாண விஷயம் தெரியாது. நல்ல வேளையா அவர் மலேசியாவில இருக்கிறார்.”
“ஏண்டா திருட்டுக்கல்யாணமா? பண்ணிக்கிட்டே?”
ரிஷியின் முகம் கோபத்தில் சிவந்தது.
“எதுடா திருட்டுக்கல்யாணம்? பெருமாள் சன்னதியில் கல்யாணம் பண்ணிக்கிட்டது திருட்டுக் கல்யாணமா? குடும்பத்துல பிரச்சனை வராம சமாளிக்க முயற்சி செய்கிறேன். என்ன நடந்ததுன்னு உன் தங்கைக் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ. நீ சற்று பொறுமையாக இரு. அவளை குழந்தை பிறந்த பிறகுதான் அங்க கூட்டிட்டு வருவேன். அதற்கு முன்னே அவளை அங்கே யாரும் எதிர்பார்க்க வேண்டாம்.”
“முதல் பிரசவம் தாய்வீட்டுலதானடா. நீ ஏன் உளருகிறாய்.?”
“நான் உளறவில்லை. காடு, மலை தாண்டி வந்தால் என் குழந்தை என்னவாகும்? அதெல்லாம் முடியாது.”
மலையரசனுக்கு சிரிப்பாய் வந்தது. “இங்க பிறந்து வளர்ந்த பெண்மணிகளுக்கு வேணும்னா கரு கலையலாம். காடு, மலையில் பிறந்து வளர்ந்த தேனரசிக்கு கரு கலையாது.”
“அண்ணா! நடுவில் நுழையிறேன்னு நினைக்காதே! அவரை தொந்தரவு பண்ணாத. இங்குள்ள பிரச்சனை என்னன்னும் எப்படி தீர்க்கணும்னு என் புருஷனுக்குத்தானே தெரியும். இப்போ எவ்வளவு வேலை அவருக்கு இருக்குன்னு தெரியுமா? என் மாமனார் நான்கு நாட்கள் கழித்து வந்துடுவார் வேலைப்பளு அப்போ குறைந்துவிடும். அப்போ நிதானமாய் பேசிக்கோயேன். இப்ப என்கிட்ட பேசு. அவருக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு.”
ரிஷிக்கு மிகவும் வியப்பாய் இருந்தது. உடனே தன் நன்றியை வெளிப்படுத்த அவளை அனணத்து உதட்டில் முத்தமிட்டான். மலையரசனுக்கு மிகவும் சங்கடமாயிருந்தது. “.என்னடா இது? என் முன்னேயே கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் உன் பாடத்தை நடத்துகிறாயா?”
ரிஷி சிரித்தபடி, “என் பிரச்சினையை என் மனைவி சொல்லிவிட்டாள். இது பற்றி ஒரு வாரம் கழித்து பேசுவோம். நிச்சயமாக இப்போது நேரமில்லை. நீ ஒரு வாரம் இங்கேயே தங்கு. பிறகு இது பற்றி பேசலாம்.” என்று கூறி விட்டு குளிக்கச் சென்றான் ரிஷி. “ம்....அண்ணனை விட நேற்று உன்னைத் தந்திரமாய் ஏமாற்றி தூக்கி வந்த புருஷன் முக்கியமாகப் போய் விட்டானா?” என்று மலையரசன் தன் தங்கையிடம் போலிக் கோபத்துடன் சொன்னது ரிஷியின் காதில் விழுந்தது. அந்தக் குரலில் மிக்க சந்தோஷம் நிரம்பிவழிந்தது.
Comments
Post a Comment