உன்னை விடமாட்டேன் – பகுதி 77
தமையனிடம் பேசிக்கொண்டிருந்த தேனரசி கதவு தட்டும் ஓசை கேட்டு கதவைத் திறந்தாள். “இந்தாம்மா மூன்றுபேருக்கும் இரவு உணவு கொண்டுவந்திருக்கிறேன். நீ பார்த்துக் கொள்ளம்மா. மாப்பிள்ளை! சூர்யகலா எப்படி இருக்கிறாள்? கூட்டிக்கொண்டுவந்திருக்கக்கூடாதா?” தன்விழி நீரைக் கட்டுப்படுத்தியபடி பேசிய ரிஷியின் தாயாரிடம் தன் தாயைக் கண்டான்
“அம்மா! கவலைப்படாதீர்கள். சூர்யகலா சுகமாக இருக்கிறாள். திரும்பவும் இங்கே வரும்போது கண்டிப்பாக கூட்டி வருகிறேன்.என்று கூறிவிட்டு, சூர்யகலா தாத்தாவுடன் சேர்ந்து பறவைகளுக்கு உணவளிப்பது, அங்குள்ள பெண்களுடன் விளையாட்டைக் கற்று விளையாடிக்கொண்டிருப்பது, பிறகு கைவினைப் பொருட்களை செய்து பார்த்துக் கொண்டிருப்பதையெல்லாம் விலாவாரியாக விவரித்தான் மலையரசன். அங்கு அவள் சந்தோஷமாய் ஒன்றி வாழ்கிறாள் என்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தாள். சரி சரி நேரமாகிவிட்டது. நீங்கள் இருவருமாய் சாப்பிடுங்கள் என்று சென்றுவிட்டார். என்ன இருவரா? என்று நினைத்தான் மலையரசன்.
மலையரசன் அப்போதுதான் கவனித்தான், ரிஷி தன்னுடன் சாப்பிடாமல் தனியே சாப்பிட்டு முடித்துவிட்டு, கம்யூட்டரில் வேலையைக் கவனிக்கிறான் என்று. அவனுக்கு மிகவும் கோபம் வந்தது. ரிஷியிடம் சண்டைபோட செல்ல முயன்றான். தேனரசி விடாப்பிடியாக தடுத்தாள். கெஞ்சினாள். அத்தை மூலமாகவும், ரிஷி மூலமாகவும் அவளுக்கு தெரிந்த விபரங்களைக் கூறி, கோடிக்கணக்கில் நட்டமாகிவிடும். நிறையபேர் பாதிக்கப்பட்டுவிடுவார்கள். மற்றொரு பக்கம் அவமானம் நேரக்கூடும். அதனால் ப்ளீஸ் நீ சாப்பிடு அண்ணா' என்றாள். ஆங்கிலம் கலந்து பேசும் நவநாகரீக மங்கையாய் கண்ட தங்கை உண்மையில் அங்கு பாடம் படிப்பதை தெரிந்துகொண்டான்.
ரிஷி சொன்னது உண்மையா? விசாரித்தான் ரிஷி கடத்தியது முதலான விபரங்களை தேனரசியின் வாயில் இருந்து பிடுங்க முடியவில்லை. 'உன் தங்கையிடம் என்ன நடந்தது என்று கேட்டுக் கொள்ளச் சொன்னானே எனக் கூறி ‘சொல்லும்மா!’ மலையரசன் துருவித் துருவிக் கேட்கவும்
“போ அண்ணா! நீ அவர்கிட்டேயே கேட்டுக்கொள்” என்றாள் முகச் சிவப்புடன்.
“அவன் உண்மையைச் சொல்வானா? உன் புருஷனுக்கு பொய் கலக்காம பேசத்தெரியாதே!”
“என்ன நீ இவ்வளவு மட்டமா அவரப் பத்தி பேசுற. அவர் ஒன்னும் அப்படியெல்லாம் இல்லை. நீ உன் நண்பனிடமே வேலை முடிந்ததும் கேட்டுக் கொள் இப்போது சாப்பிடு.” அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. எப்படி மாறி விட்டாள். அங்கே ரிஷியை அப்படி வெறுத்தாள். இங்கே அவனுக்காக உயிரையே விடுவாள் போல. மலையரசன் வேறுவழியின்றி இப்போதும் சாப்பிட்டான். ஆனால் பெயரளவுக்கே. தேனரசி வற்புறுத்தியும் அவன் முழுமையாக சாப்பிடவில்லை “வயிறு நிறைந்துவிட்டது. போதும்“ என்றான்.
தான் கையோடு கொண்டு வந்திருந்த வன அதிகாரியின் தொலைபேசி எண்ணை தேனரசியிடம் கொடுத்து தாத்தாவிடம் தகவல் கொடுக்க சொல்லும்படி ரகசியமாக பேசச்சொன்னான்.
“ஏன் அண்ணா!” என்று கேட்ட தேனரசியிடம் அவள் கடத்தப்பட்ட நாள் முதல் வன அதிகாரி ரகசியமாக உதவியதையும், அவர் ரிஷியைக் கண்டு நிரம்ப பயப்படுவதையும் கூறினான் மலையரசன்.
“என்னண்ணா இது? அவர் ஒன்றும் மோசமானவர் இல்லை. அவரை நீ ஏன் இவ்வளவு மட்டமாக நினைக்கிறாய்“ என்று கோபப்பட்டு பேசினாள். பிறகு, “நான் அவரிடம் எதையும் மறைக்க மாட்டேன்” என்றாள்.
“இருக்கட்டும் தேனரசி. உன் கணவன் உத்தமனாகவே இருக்கட்டும். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், நான் ரிஷியிடம் எதுவும் கூற மாட்டேன் என்று வன அதிகாரியிடம் வாக்குறுதி கொடுத்துள்ளேன்” என்றான்.
“சரி அண்ணா! நான் அவரிடம் எதுவும் கூறவில்லை. சரியா?” என்றபடி வன அதிகாரியிடம் போனை போட்டு, தானே முதலில் பேசினாள். விவரங்களை தேவையான அளவு தன் கணவர் பெயர் கெடாமல் மிகச்சுருக்கமாய் முடித்து, ‘அண்ணன் இங்கு ஒரு வாரம் தங்கிய பின்வருவார்கள். அங்கு எங்கள் ஆட்களிடம் தகவல் கூறி விடுங்கள்’ என்று மலையரசனிடம் பேசுமாறு சொல்லி, கொடுத்துச் சென்று விட்டாள்!
Comments
Post a Comment